செவ்வாய், 5 பிப்ரவரி, 2008

பறவைகளே வேட்டையாடின

05.०२.2008,
செவ்வாய்கிழமை,
கிளிநொச்சி கனேசபுரம் விமானத்தாக்குதல்....
---------------------------------------------------------

வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமம்
அதை தூக்கியபடி பறவையும்
அடைபட்டுக்கொண்டிருந்தது
-----------------------------------------------------------------------------

இனி எல்லோரும் ஊமைகள்

நிலங்களுக்காகவே
கொடுமைக்காட்சிகளைபேசியபடி
நிறம் பூசியது பறவையின்
ஊனமடைந்த கைகள்

-----------------------------------------------------------------------------

அந்தப்பறவை
இன்னும் வட்டமிட்டு
கோரத்தை சுமந்து
எங்கள் திசைகள்மீது
சிறகுகளை அடித்தது

-----------------------------------------------------------------------------

அதன்குணம் வீடுகளைச்சூழ
விசம்பரப்பும்
பார்வையை ஆழவிட்டு
மரங்களை அசைத்துதின்றது

-----------------------------------------------------------------------------

பறவைகளே வேட்டையாடின
அதுவும்
மனிதர்களை சப்பியபடி
வீடுகளை காவிக்கொண்டு
கிராமத்தை பிரளயம்நோக்கிக்கொண்டுபோனது

-----------------------------------------------------------------------------

சுவரில் மோதி
அடிபட்டு விழுந்தது பறவையும் கிராமமும்
சுவரடியில்
கிராமம் சிதறிக்கொட்டியது

அந்தப்பறவைக்குப்பிறகு

-----------------------------------------------------------------------------

கோழிகள்கூட குஞ்சுகளுக்கு
பருந்தாயின
குஞ்சுகளும் பருந்தாகின
சிறகுகளை மணந்து
உணர்ந்துகொள்ளமுடியவில்லை?

-----------------------------------------------------------------------------

சிறகுகள் பயங்கரம்கலந்து புயலாகின

மீண்டும் அந்தப்பறவை
நிறம் பூசிவரும்
நினைவிலிருக்கிறது
அந்தப்பறவையின் பயங்கரமான சிறகுகளும்
அது நிலத்தில் விழுத்தும் வட்டமும்
கொடூரம் தாங்கியசொண்டும்

--------------தீபச்செல்வன்--------------
----------------------------------------------

0 கருத்துகள்:

Copyright 2009 ஒளி தீபம். Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan